ஆலயத்தின் சுருக்க வரலாறு
இந்துமா கடல் நடுவே நித்திலங்கொழிக்கும் முத்தென விளங்கும் ஈழ நன்நாட்டின் வடபால் அமைந்த முடியெனத்திகழும் சித்தர்கள் வாழ்ந்த சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின் கீழ்த்திசையில் எழில் கொஞ்சும் சிகரமென விளங்கும் தென்மராட்சிப்பகுதியில் முக்கனிகளும், நிலவளமும், கலைவளமும், கவின்பெறு ஆலயங்கள் நிரம்பிய இறைவளமும் பொருந்திய தென்னைமரச்சோலை நிறைந்ததும் மாஞ்சோலையாம் வடபகுதியில் விருப்போடு அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார் தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார்.
இவ்வாலயத்தின் பூர்விக வரலாறு பற்றி முழுமையாக அறிய முடியாதுள்ளபோதிலும், 1872 -ம் ஆண்டுக்கு முன்பு கோவிலடியென்னும் காணியில் எழுந்தருளியிருந்த மேற்படி ஆலயத்தின் பராமரிப்பாளராக சோமசுந்தரம் கணபதிநாதக்குருக்கள் அவர்கள் பிரஷ்தாபிக்கப்பட்டிருப்பதால் ஆலயகர்த்தா அவரின் மூதாதையராக இருக்கலாம் எனக் கருத முடிகிறது.
இவ்வாலயத்தில் முன்பு ஓர் தடவை தேர்த்திருவிழா நடைபெற்றபோது யானை கட்டி யானையால் விநாயகப்பெருமானின் தேர் இழுத்துச்செல்லப்பட்டதாக முதியவர்கள் கூறிப்பெருமைப்படுகின்றனர். பின்னர் இத்தேர் வேறு ஓர் ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கருத்துத்தெரிவிக்கின்றனர்.
“கோவில் இல்லா ஊர் திருவில் ஊர்” என்னும் முதுமொழிக்கிணங்க மீசாலைக் கிராமத்தின் நடுநாயகமாக இவ்வாலயம் திகழ்கின்றது. இவ்வாலயத்தின் புதுமை அருளால் போர்க்காலகட்ட அசாதாரண சூழ்நிலைகளில்கூட இக்கிராமம் பாதிப்புக்களின்றிக் காப்பாற்றப்பட்டது என அடியார்கள் கூறுவது பெருமையாகும். இவ்வாறாக ஆலயத்தின் புதுமைகளைக் கூற முடியும். எல்லாம் வல்ல தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் பாதக்கமலங்களைத் தொழுது எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகின்றோம்.
தகவல் - (சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்-2007)
ஆலய விபரம்
ஆலயத்தின் பெயர்: மீசாலை தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம்
முகவரி: மீசாலை வடக்கு, கொடிகாமம்
பதிவு இலக்கம்: 6/3/J/10/P179 -11-01-1983
கிராம அலுவலர் பிரிவு:- J/321