Flash News

ஆலய வளர்ச்சி அறிக்கை-2023 வரை

home // அறிக்கை-2023

ஆலயத்தின் பிந்திய வளர்ச்சி

ஆலயத்தில் 1988 வரை 12 நாட்கள் அலங்காரத்திருவிழாவும் கடைசிநாள் பூங்காவனமும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அதற்கு முற்பட்ட காலத்தில் நித்திய, நைமித்திய பூசைகளும், மாதந்தோறும் சங்கிராந்தி, சதுர்த்தி, விநாயகர் விரதம், கந்தசஷ்டி, திருவெம்பாவை, திருக்கார்த்திகை, கார்த்திகை பரணி, கார்த்திகை திங்கள், ஜப்பசி வெள்ளி மற்றும் சரஸ்வதி பூசை என்பன நடைபெற்று வந்துள்ளன.

அலங்காரத் திருவிழா கொடியேற்ற திருவிழாவாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு காலம்சென்ற திரு.திருமதி கிருஸ்ணசாமி சேதுப்பிள்ளை அவர்களினால் கட்டுத்தேருடன் கூடிய மகோற்சவ விநாயகரும் உருவாக்கப்பட்டு 1989இல் முதல்முறையாக அவர்கள் வீட்டிக் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் உபயமாக கொடியேற்றத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. ஆலயக்குருக்கள் உற்சவ காலத்தில் தங்கி இருக்கவும், அன்னதான காரியங்களுக்காவும் காலஞ்சென்ற வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் அவர்களினால் மடம் அமைக்கப்பட்டு ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

அன்று தொட்டு, 10 நாட்களைக்கொண்ட மகோற்சவம் வேட்டைத்திருவிழா, சப்பறத்திருவிழா, தேர், தீர்த்தத்துடன் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்காலங்களில் அடியார்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காவடி, பால்செம்பு, அங்கபிரதிஸ்டை போன்றவற்றை நிறைவேற்றுவார்கள்.

1992இன் பிற்பாடு, எல்லோரையும் அரவணைத்து கிராமத்தின் ஒற்றுமையினை பறைசாற்றும் எண்ணக்கருவோடு வெள்ளிக்கூட்டுப்பிரார்த்தனையுடன் நடைபெற்று வந்த பூசையானது, அலங்காரத்திருவிழாவாக மாற்றப்பட்டு, வசந்த மண்டப பூசை நடைபெற்று எழுந்தருளிப்பெருமான் உள்வீதி வலம்வரும் வண்ணம் மெருகூட்டப்பட்டது. வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளியும், அடியவர்கள் உபயத்தினை பொறுப்பெடுத்துக்கொண்டதின்படி சிறப்பாக நடைபெற்றது. அவ்வண்ணம், விநாயகர் விரதம் நடைபெறும் 21 நாட்களும், 21 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விமரிசையாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மாதாந்த சங்கடஹர சதுர்த்தியும் ஆரம்பிக்கப்பட்டு மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

1998ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிசேகத்தின் பொழுது வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் குடும்பத்தினர் பங்களிப்பில் சந்தான கோபாலர் சந்நிதானம் அமையப் பெற்றது.

2004ம் ஆண்டளவில் எம்பெருமானுக்கு ஓர் சித்திரத்தேர் உருவாக்கப்பட வேண்டும் என்ற உந்துதலினால் தேர் திருப்பணி சபையில் ஒன்று நிர்வாக சபையின் அனுசரணையோடு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக திரு ந. பாலசந்திரனும், செயலாளராக திரு கு. சிவானந்தமும், பொருளாளராக மு. சிவசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டு தேர் திருப்பணி ஆரம்பமானது. இதற்கான நிதி உதவி உள்ளூர், வெளிநாட்டுத்தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்முறையாக 16-10-2007 இல் சித்திரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர் தரிப்பிடமாக தேர் முட்டியும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, எம்பெருமான் தீர்த்த உற்சவத்திற்கு எழுந்தருளுவதற்காக, திரு சுப்பிரமணியம் விஜயகுமார் (சுவிஸ்) அவர்களால் தீர்த்தக்கேணியும், இளைப்பாற்று மண்டபமும் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2014ம் ஆண்டளவில் அப்போது நிர்வாக சபை இருந்த திரு இ. சரவணமுத்து மற்றும் வே.நாகராசா அவர்களின் உடல்நிலை, வயோதிபம் காரணமாக புதிய நிர்வாக சபை (தற்போது பதவியில் உள்ளவர்கள்) தெரிவு செய்யப்பட்டது.

அடியவர்களுக்கு மழை, வெயில் காலங்களில் ஏற்படும் சிரமங்களை கருத்தில்கொண்டு உள்வீதி சுற்றுக்கொட்டகை அமைக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எல்லோருடைய பங்களிப்பினால் கோவிலின் உள்வீதி சுற்றுகொட்டகை அமைக்கப்பட்டது. திருவிழாக் காலங்களில் அன்னதான நிகழ்வு இடம்பெறும்போது ஏலவே இருந்த அன்னதானமடத்தின் இடப்போதாமைக்கு நிரந்தர தீர்வு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணியபோது திரு வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் குடும்பத்தினரது (கனடா) உதவியினால் மடம் திருத்தி விரிவாக்கப்பட்டது.. திரு செ. நாகேந்திரம் அவர்கள் குழாய் கிணறு ஒன்று அமைத்து அத்துடன் தண்ணீர்த்தொட்டி, இயந்திர மோட்டார் என்பவற்றையும் நிறைவு செய்து உதவினார்.

2011 இல் நடைபெற்ற கும்பாபிசேகத்தின்போது திரு சுப்பிரமணியம் பிரபாகரினால் லக்‌ஷ்மிக்குரிய சந்நிதானமும், திருமது சின்னம்மா குடும்பத்தவரால் சண்டேஸ்வரருக்குமான சந்நிதானமும் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகளாக கிருஸ்ணர், மகாலக்‌ஷ்மி, முருகப்பெருமான், வைரவர் மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் கோவில்கொண்டு எழுந்தருளியுள்ளனர். தற்போது பரிவார மூர்த்திகளுக்கான விசேட பூசைகளாக கிருஷ்ண ஜெயந்தி, சுவர்க்கவாசல் ஏகாதசி, வரலக்‌ஷ்மி நோன்பு, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை என்பன அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆலயத்தின் தேவை கருதி, திரு.திருமதி விஜயகுமார் சிவசோதி தம்பதியினர், தமது ஏக புத்திரி சுஜானி சார்பாக யாகசாலையினை திருத்தி அமைத்து அதனுடன் சேர்ந்த இரண்டு களஞ்சிய அறைகளையும் அமைத்து அதற்கு இரும்பு பெட்டக வசதியையும் எற்படுத்தி தந்துதவியுள்ளனர்.

2022 காலப்பகுதியில் கோவில் உள்வீதிக்கான மின் இணைப்பு திருத்தப்பணி திருமதி சங்கர் பிரேமினி அவர்களால் பூர்த்தி செய்யப்பட்டது. 2023 இல் திரு.வாரித்தம்பி தெய்வேந்திரம் அவர்களால் பஞ்சமுக பிள்ளையார் அமையப்பெற்று அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

ஆலயத்தில் ஆண்டில் முதல்முறையாக விநாயக விரதம் ஆரம்பிக்கும் முதல் நாள் பெளணர்மி - திருக்கார்த்திகை தினத்தில் ஊரில் உள்ள எல்லா அடியவர்களின் பங்களிப்புடன் எல்லோருக்கும் தெற்பை அணிவித்து பெரிய யாக குண்டம் அமைத்து விமரிசையாக கணபதி ஹோமம் (யாக பூசை) நடைபெறுகின்றமை சிறப்பு அம்சமாகும்.

கோவிலின் புதுமைகள்

ஆலயத்தின் சிறப்பினை எடுத்துக்கொண்டால், 1987ம் ஆண்டு (இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலை கொண்ட காலம்) நடைபெற்ற சம்பவம் நினைவிற்கு வருகிறது. இவ்வாண்டில் ஜப்பசி மாதத்தில் வரும் கந்த ஷஷ்டி காலத்தில், மாலை நான்கு மணியளவில் ஏராளமான பக்தர்களுடன் கந்த ஷஷ்டி பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் வான் தாக்குதல் இடம்பெற்றது. கோவிலைச் சூழ்ந்து குண்டுகள் வந்து விழுந்தன. எவ்வாறாயினும் எவருக்குமோ, ஆலயத்தின் கட்டடத்திற்கோ எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்பொழுது பெருத்த இடிமின்னலுடன் கூடிய மழை ஏற்பட்டது. ஆலய வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது, ஏராளமான அடியார்கள் கூடியிருந்த வேளையில், தற்போது தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டிருக்கும் இடம் பாரிய இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவ்விடத்தில் இருந்த ஓர் தென்னை மரமும், மாமரமொன்றும் கருகு சாம்பலானதுடன் கிட்டத்தட்ட 1200 அடி பரப்பிற்கு புல்,பூண்டு எதுவும் இல்லாமல் எரிந்து நாசமானது. கோவிலின் உள் இருந்த அடியார்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் காப்பாற்றியது தட்டாங்குளப் பிள்ளையாரின் அற்புத செயல் என்றால் மிகையாகாது.

முடிவாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், இறுதியாக கும்பாபிசேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, 3/11/2023 அன்று பாலஸ்தாபன கும்பாபிசேகம் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

எதிர்காலத் திட்டமிடல்கள்

நோக்கு

சைவசமயத்தில் குறிப்பிடப்பட்ட அறநெறிகளை வளர்ந்துவரும் இளம் சமுதாயத்திற்கு ஊட்டி, எதிர்காலத்தில் வன்முறைகள் அற்ற சமயத்தில் ஈடுபாடு கொண்ட நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்குதல்.

துயரப்படுபவர்களை ஆற்றுதல்படுத்துவதற்காகவும், இறைவனைப் பிரார்த்தித்து தங்கள் வேண்டுதல்களை தட்டாங்குளத்தில் பதியும் எம்பெருமானிடம் நிறைவேற்றுவதற்கான ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.

எதிர்காலத் திட்டங்கள்

1. நித்திய, நைமித்திய பூசைகள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் வகையில் பூசகர் ஒருவர் நிரந்தரமாக நியமித்தல்.

2. கோவில் காணியில் அர்ச்சகருக்கான வதிவிடம் ஒன்றை அமைத்து தங்க வைப்பதன் மூலம் நித்திய பூசையை சிறப்பாக நடாத்துதல்.

3. ஆலயத்திற்கான இராஜ கோபுரம் அமைத்தல்.

4. கோவிலின் அருகில் உள்ள ‘வை.சுப்பிரமணியம்’ மடத்தில் வெள்ளிக்கிழமைகளில் சிறுவர்களுக்கான அறநெறி வகுப்புக்கள் மற்றும் இசை வகுப்புக்கள் போன்றவற்றை இலவசமாக நடாத்துதல்.

5. கோவில் காணிக்குள் ஓர் கல்யாண மண்டபம் ஒன்றை அமைத்து அதில் இருந்து கணிசமான வருமானத்தை எடுத்து அதில் இருந்து பூசகர் வேதனம், பராமரிப்பாளர் வேதனங்களை வழங்குதல்.

6. முன் உள்ள பொதுக்குளத்தை மெருகூட்டி அதன் ஸ்திரத்தன்மையை மாற்றியமைத்தல்.

7. இராஜ கோபுரத்துடன் சேர்ந்த மணிமண்டபம் அமைத்தல்.

8. ஆலயத்திற்கான சப்பறம் ஒன்றினை செய்தல்.